திருப்பதி சேஷாச்சல வனப்பகுதியில் உள்ள தும்பூரூ தீர்த்த யாத்திரையில் 40 ஆயிரம் பக்தர்கள் நீராடல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து பாபவிநாசம் அணைக்கு அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 8 கிலோ மீட்டரில் நடந்து சேஷாச்சல வனப்பகுதியில் சென்றால் தும்பூரூ தீர்த்தம் வரும். இந்த தீர்த்தத்தில் பங்குனி மாத பவுர்ணமி அன்று புனித நீராடுவது சிறப்பு. அவ்வாறு நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், தொடர்ந்து நேற்று 2வது நாளாக காலை 6 மணி முதல் தும்புரூ தீர்த்தம் சென்று வர பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் தும்பூரூ தீர்த்தம் சென்று புனித நீராடி தரிசனம் செய்தனர்.

தும்பூரூ தீர்த்தத்திற்கு வந்த பக்தர்களின் வசதிக்காக பாபவிநாசம் அணையில் வாரி சேவகர்கள் மூலம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், அணை அருகே முதலுதவி மையம், இரண்டு ஆம்புலன்சுகள், தும்பூரூ தீர்த்தத்தில் மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்மூலம் ஏராளமான பக்தர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. தொடர்ந்து, பக்தர்கள் அன்னபிரசாதம் பெறும் வகையில் பாபநாசத்தில் இருந்து செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய்களும், பக்தர்கள் சிரமமின்றி செல்ல வழிநெடுகிலும் ஏணிகள், தடுப்புகள், இரும்பு வேலிகள், கயிறுகள் அமைக்கப்பட்டது.

சுகாதார துறையின் மூலம் 80க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் அவ்வப்போது தூய்மை பணிகளை மேற்கொண்டனர். போலீசார் வனத்துறை, தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் ஒருங்கிணைந்து, பாபவிநாசம் முதல் தும்பூரூ தீர்த்தம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பாபவிநாசம் அணை அருகே போதிய இட வசதி இல்லாததால் பக்தர்கள் அனைவரும் கோகர்பம் அணை அருகே வாகனங்களை நிறுத்தப்பட்டு ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மூலம் பாபவிநாசம் அணை வரை அழைத்து செல்லப்பட்டனர்.

The post திருப்பதி சேஷாச்சல வனப்பகுதியில் உள்ள தும்பூரூ தீர்த்த யாத்திரையில் 40 ஆயிரம் பக்தர்கள் நீராடல் appeared first on Dinakaran.

Related Stories: