தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில்மேயர் ஜெகன்பெரியசாமி திடீர் ஆய்வு

தூத்துக்குடி, ஏப். 7: தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் மேல்நிலைப்பள்ளிக்காக கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறைகளை பார்வையிட்டார். இதே வளாகத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கும் கூடுதல் வகுப்பறை, சாய்வு தளம் மற்றும் பிசியோதெரபி மருத்துவர் வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை செய்து தருவதாக மேயர் உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி டபுள்யுஜிசி ரோட்டில் சி.வ.தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்த மேயர், அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு புதிய வசதிகள் செய்து கொடுக்கப்படுமென உறுதி அளித்தார். பின்னர் பாண்டுரங்கன் தெருவில் உள்ள மேலூர் நடுநிலைப்பள்ளியை அறிஞர் அண்ணா மாநகராட்சி மண்டபம் எதிரில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றுவது தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் மேயர் ஜெகன்பெரியசாமி கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கிறது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிவந்தாகுளம் நடுநிலைப்பள்ளி 250 மாணவ – மாணவியர் இருந்த நிலையில், கடந்த ஓராண்டில் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் அனைத்து பள்ளிகளிலும் புதிய கட்டிடங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும், என்றார். ஆய்வின்போது மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் அன்னலெட்சுமி, முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டுராஜா, பாலன், கவுன்சிலர் சுரேஷ்குமார் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில்

மேயர் ஜெகன்பெரியசாமி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: