அதிகரிக்கும் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை 3 நாட்களில் 126 நாய்களுக்கு நெல்லையில் ‘கு.க.’ ஆபரேஷன்

நெல்லை : நெல்லை மாநகரில் அதிகரிக்கும் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி சாலைகளில் சுற்றித்திரிந்த 126 நாய்களை பிடித்து அவற்றிற்கு இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நெல்லை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் சுற்றும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாய்கள் ஒவ்வொரு முறையும் 9க்கும் அதிகமான குட்டிகளை ஈனுவதால் அவை வேகமாக வளர்ந்து பெருக்கமடைகின்றன. சாலையில் சுற்றும் நாய்கள் பொதுமக்களுக்கு பல்வேறு தொல்லைகளை கொடுப்பதாக மாநகராட்சி தொடர்ந்து புகார்கள் வந்தன. குறிப்பாக இரவு நேரங்களில் பணி முடிந்து செல்பவர்கள் நாய்கள் இருக்கும் சாலைகளை கடப்பதற்கு அச்சப்பட்டனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில், மதுரையை சேர்ந்த ‘சமூக விலங்குகள் வன்கொடுமை தடுப்பு’ (எஸ்பிசிஏ) அமைப்புடன் இணைந்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் சாலையில் சுற்றித்திரிந்த நாய்களை கடந்த 3 நாட்களாக வலைவீசி பிடித்தனர். மேலப்பாளையம், பெருமாள்புரம் பகுதிகளில் முதல் நாள் 35 நாய்களும், 2ம் நாள் 43 நாய்களும் பிடிக்கப்பட்டன.இதன் தொடர்ச்சியாக பாளை மண்டல உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா ஆலோசனையின்பேரில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், சங்கரலிங்கம், மேஸ்திரி மாரியப்பன் உள்ளிட்ட குழுவினர் பாளை காந்தி மார்க்கெட், முருகன் குறிச்சி, பாளை பஸ்நிலையம், ஜோதிபுரம், ராஜேந்திர நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில் நேற்று சுற்றித்திரிந்த நாட்டு நாய்களை வலை வீசி பிடித்தனர். நேற்று ஒரேநாளில் மட்டும் மேலும் 48 நாய்கள் பிடிபட்டன.இவற்றை வேன்களில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்குகொண்டு சென்று தேவையான முதலுதவி சிகிச்சை மற்றும் உணவுகள் அளிக்கப்பட்டன. பின்னர் 126 நாய்களுக்கும் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆண்,பெண் என இருபால் நாய்களுக்கும் கருத்தடை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அங்கேயே 3 நாள் டாக்டர் குழுவினர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு மீண்டும் பிடிபட்ட இடத்திலேயே விடப்படும்.அறுவை சிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆண்,பெண் நாய்களுக்கு இனி, இனப்பெருக்கம் இருக்காது என தெரிவித்தனர். தொடர்ந்து தச்சை, நெல்லை மண்டலங்களிலும் நாய்களின் வேட்டையும் அவற்றிற்கு கு.க ஆபரேஷனும் தொடர்ந்து நடக்கும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்….

The post அதிகரிக்கும் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை 3 நாட்களில் 126 நாய்களுக்கு நெல்லையில் ‘கு.க.’ ஆபரேஷன் appeared first on Dinakaran.

Related Stories: