திருவனந்தபுரம் அருகே விபத்து குமரி கட்டுமான தொழிலாளி லாரி மோதி சாவு

நாகர்கோவில், மார்ச் 28: திருவனந்தபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி லாரி மோதி உயிரிழந்தார். ராஜாக்கமங்கலம் அருகே சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(43). கட்டுமான தொழிலாளி. நேற்று காலையில் கிருஷ்ணகுமார் மற்றும் உடன் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் காரில் சபரிமலை அருகே பந்தளத்திற்கு வேலைக்கு சென்றனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் வெஞ்ஞாறமூடு, ஆலந்தறை பகுதியில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே காரை நிறுத்தி அனைவரும் டீ குடித்தனர். பின்னர் மீண்டும் காரில் ஏற முயன்ற போது அந்த வழியாக வந்த ஒரு கார் கிருஷ்ணகுமார் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணகுமார் மீது காரேட் பகுதியில் இருந்து வெஞ்ஞாறமூடு நோக்கி சென்ற லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

 இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கிருஷ்ணகுமார் உயிரிழந்தார். அவரது உடல் வெஞ்ஞாறமூட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. வெஞ்ஞாறமூடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகுமார் உடல் எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கிருஷ்ணகுமார் மீது மோதிய காரினை  வெஞ்ஞாறமூடு போலீசார் பறிமுதல் செய்தனர்.  கிருஷ்ணகுமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரி தொடர்பாக அந்தபகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை இறந்த வேதனையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மகள்

சாலை விபத்தில் இறந்த கிருஷ்ணகுமாருக்கு கிருஷ்ணகுமாரி என்ற மனைவியும், பவித்ரா என்ற மகளும், சுபின் என்ற மகனும் உண்டு.   பவித்ரா கணபதிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். சுபின் 9ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் காலையில் பொதுத்தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த வேளையில் தந்தை கிருஷ்ணகுமார் விபத்தில் சிக்கி இறந்த தகவல் கிடைத்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து கதறி அழுது கொண்டிருந்த பவித்ராவை உறவினர்களும், பள்ளி ஆசிரியர்களும் தேற்றி அவரை தேர்வு எழுத அனுப்பி வைத்தனர்.

Related Stories: