சிறார் மன்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: தாம்பரம் கமிஷனர் வழங்கினார்

துரைப்பாக்கம், மார்ச் 27: தாம்பரம் மாநகர காவல்துறை நடத்திய சிறார் மன்றங்களுக்கு இடையேயான  விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு தாம்பரம் காவல் ஆணையர்  அமல்ராஜ் பரிசுகளை வழங்கினார். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 14 சிறுவர் மன்றங்கள் மூலம் 651 சிறுவர்களும், 289 சிறுமிகளும் என மொத்தம் 940 பேர் பயன்பெற்று வருகின்றனர்.  இந்த மன்றத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களது திறமைகளை வளர்க்கும் வகையிலும் கபடி, கைப்பந்து, கால்பந்து, பந்து எறிதல், ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் கண்ணகி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், ஒட்டுமொத்த போட்டிகளில் கண்ணகி நகர் சிறுவர் மன்றத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு தாம்பரம் காவல்ஆணையர் அமல்ராஜ் விளையாட்டு உபகரணங்கள், பொது அறிவு புத்தகங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் கண்ணகி நகர் உதவி கமிஷனர் ரியாசுதீன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Related Stories: