மதுரை: மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் பசுமலையில் உள்ள திருமண மண்டபத்தில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் ஒச்சுபாலு தலைமை வகித்தார். நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் பொன்முத்துராமலிங்கம், தணிக்கைக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ பேசுகையில், ‘தமிழ் இனத்தலைவர் கலைஞர் நூற்றாண்டுவிழாவை திமுக மட்டுமல்லாமல் மதுரை மாநகர் மாவட்ட மக்களின் நாளாக கொண்டாடப்பட வேண்டும். முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்து தேர்தல் களம், வெற்றிப்பாதையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. நமது திட்டமிட்ட தேர்தல் பணியே அதற்கு காரணம். தேர்தலில் முக்கியமானது பூத் கமிட்டிகளின் செயல்பாடுகள் தான். ஒவ்வொரு வட்டக்கழகமும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் படிவங்களை புகைப்படத்துடன் பூர்த்தி செய்து மாநகர் மாவட்ட அலுவலகத்தில் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும்.
