ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ஊட்டி: ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து ஊட்டியில் காங்கிரஸ் கட்சியின் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது, பாஜக.,வினர் குறித்து ராகுல்காந்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சூரத் நீதிமன்றத்தில் பாஜக., எம்எல்ஏ., புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டனர். இதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று ஊட்டியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டியில் உள்ள ஏடிசி., பகுதியில் நடந்த ஆர்பாட்டத்திற்கு நகர தலைவர் நித்ய சத்யா தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விவேக் லஜபதி, மாநில எஸ்டி., பிரிவு தலைவர் ப்ரியா நாஸ்மிகர், மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரகு, மாநில பேச்சாளர் ரவிக்குமார், முன்னாள் நகர தலைவர் கெம்பைய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தின் போது, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநில மகளிரணி செயலாளர் ராஜேஷ்வரி, கவுன்சிலர் நாகராஜ், மாவட்ட செயலாளர் பட்பயர் பத்மநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் நாகராஜ், வின்சென்ட், கிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மானேஷ்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  மஞ்சூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து மஞ்சூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதுாறாக பேசியதாக போடப்பட்ட வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டாண்டு சிறை தண்டனை விதித்ததுடன் இது தொடர்பாக மேல் முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் பினை வழங்கியுள்ளது.  இந்நிலையில் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் ஒன்றிய பா.ஜ அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மஞ்சூரில் நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு குந்தா வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் ஆனந்த்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் வட்டார தலைவரும் கீழ்குந்தா பேரூராட்சி துணை தலைவருமான நேரு முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நாகராஜ் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் பழிவாங்கும் போக்கை கண்டித்து பேசினார்.  இதை தொடர்ந்து ஒன்றிய பா.ஜ., அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் பொது செயலாளர் குமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் உசேன், குந்தா பஞ்சாயத்து கமிட்டி தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், தீபு, ராணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Related Stories: