சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ.80 கோடியில் அமைக்கப்படும் திறன் மேம்பாட்டு மைய அறிவிப்பால் தொழில் முனைவோர் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி, மார்ச் 21:தமிழக பட்ஜெட்டில் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ.80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதனால் தொழில் முனைவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் உள்ள மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய தொழில் நகரமாக ஓசூர் உள்ளது. இங்கு குண்டூசி முதல் விமானம் வரை தயாரிக்கும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பெரிய மற்றும் சிறியதுமான தொழிற்சாலைகள் உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலங்களில் இருந்தும், குறிப்பாக வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இதனால் ஓசூர் பகுதியில் சிப்காட் அதிக அளவில் உள்ளதால், அதனை விரிவுபடுத்தும் வகையில் சூளகிரி பகுதியில் சிப்காட் அமைக்கப்பட்டது. அங்கும் ஏராளமான புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஓசூர் முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும் ஏராளமான தொழிற்சாலைகள் புதியதாக துவங்கப்பட்டுள்ளது. அவ்வாறு துவங்கப்பட்ட தொழிற்சாலைகள் மூலம் ஏராளமான படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர். இதற்காக தமிழக அரசு ஏற்பாட்டின் பேரில் பல்வேறு பகுதிகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் 500க்கும் மேற்பட்ட தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதில் கூறப்பட்ட வாக்குறுதிகளில் 85 சதவீதத்திற்கும் மேல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறப்படாத இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காக்கும் நம்மை காக்கும் 48, மக்களைத் தேடி மருத்துவம், பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட சொல்லாத பல திட்டங்களையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து நடைமுறைப்படுத்தினார். இதில் பல முக்கிய திட்டங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்த பெருமையை கொண்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தமிழக பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் தேர்தல் வாக்குறுதியின் மிக முக்கியமானதாக கருதப்படும் குடும்ப தலைவிக்கு ஆயிரம் வழங்குவது என்ற அறிவிப்பும் வெளியானது. இது தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை தொழில் வளர்ச்சி மிகுந்த ஓசூரில் புதிய பேருந்து நிலையம், தொழில் வளர்ச்சிக்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஏற்கனவே அறிவித்த தமிழக அரசு, தற்போது சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ.80 கோடி அளவில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைப்பதாக அறிவித்துள்ளது தொழில் முனைவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தொழில் முனைவோர்கள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்திலேயே தொழில் வளர்ச்சி மிக வேகமாக வளரும் மாவட்டம் ஆகும். கடந்த ஆண்டில் ரூ.1800 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சூளகிரி சிப்காட் பகுதியில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிப்காட் அருகில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த இங்கேயே பயிற்சி அளிக்கப்பட்டு, புதிய தொழில் முனைவோர்களாகவும் தொழில் வளர்ச்சி மிகுந்த நிறுவனங்களுடன் நேரடி தொடர்பும் பெரும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும், அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் ஒரே இடத்தில் பயிற்சி கொடுத்து தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த மிகப்பெரிய மையமாக மாறும் வாய்ப்பு உள்ளது, என்றனர்.

Related Stories: