ஓசூர், டிச.31: ஓசூர் அருகே 2 ஒற்றை யானைகள் ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிவதால் விவசாயிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட யானைகள், கடந்த 2 வாரங்களாக முகாமிட்டிருந்தன. இந்த யானைகளை 4 நாட்களுக்கு முன்பு, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர். அங்கிருந்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு யானைகளை விரட்டி சென்றனர். அப்போது, கூட்டத்திலிருந்து தனியாக பிரிந்த 2 யானைகள், சானமாவு வனப்பகுதியில் தனித்தனியாக சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் பகல் நேரத்தில் வனப்பகுதியில் முகாமிட்டவாறு, இரவு நேரத்தில் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த ஒற்றை யானைகளால் விவசாயிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர். சானமாவு வனப்பகுதியில் யானைகள் ஆக்ரோஷமாக சுற்றி வருவதால் கால்நடை மேய்ச்சலுக்காகவோ, விறகு பொறுக்கவோ பகல் நேரங்களில் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
