இ-சேவை மையம் நடத்த விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு, மார்ச் 22:  இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது, படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்தவும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்,  தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்கி வருகின்றது.

மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது. இத்திட்டத்தின் நோக்கமானது, அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து இ-சேவை மையங்களில் பொது மக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து, மக்களுக்கு சிறந்த சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும். எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘அனைவருக்கும் இ-சேவை மையம்’ திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in/ (or) https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும். விண்ணப்பங்களை 15.3.2023 அன்று காலை 11.30 மணி முதல் 14.4.2023 அன்று இரவு 8 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும்.

கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3000  மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6000 ஆகும். இவ்விண்ணப்பக் கட்டணத்தை ஆன்-லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்க்குறிய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: