பரமக்குடி: பரமக்குடியில் ஓட்டப்பாலம் பகுதியில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளதாக பரமக்குடி பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழக நெடுஞ்சாலைத் துறையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உட்கோட்டம் 398 கிமீ பரப்பளவை கொண்டது. மேலும், அதிகமான கிராமப்புற சாலைகளை இணைக்கக் கூடிய நெடுஞ்சாலைகள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட சாலைகள் தரம் இல்லாமல் முற்றிலும் சேதம் அடைந்தும், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த நிலையில், திமுக பொறுப்பேற்றவுடன் பரமக்குடி உட்கோட்டத்திற்கு ரூ.24 கோடி மதிப்பிலான சாலைகள் மற்றும் சிறுபாலங்கள் அமைக்கும் திட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டு, பணிகள் நடந்துள்ளன.
மேலும் ஓட்டப்பாலம் பகுதியில் முருகேசன் எம்எல்ஏவின் கோரிக்கையை தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1.75 கோடி செலவில் ரவுண்டானா அமைக்கும் பணி துவங்கி, தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இதனால் மதுரை, முதுகுளத்தூர், காரைக்குடி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், பள்ளி வாகனங்கள், டூவீலர் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் விபத்துகளில் சிக்காமல் செல்ல முடியும். இது குறித்து நகர்மன்ற கவுன்சிலர் பாக்கியம் கூறுகையில், ‘ஓட்டப்பாலம் பகுதியில் வாகனங்கள் பிரிந்து செல்லும் போது அதிகமான விபத்துகளும், போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்பட்டது. நகர்மன்ற உறுப்பினர் என்ற முறையில் எம்எல்ஏ, எம்.பி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம், ஓட்டப்பாலத்தில் ரவுண்டான அமைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். எம்எல்ஏ முருகேசனின் தொடர் முயற்சியால் ரவுண்டானா அமைக்கும் பணி நடந்து தற்போது முடியும் நிலையில் உள்ளது’ என்றார்.
பரமக்குடியை சேர்ந்த வாகன ஓட்டுநர் முருகானந்தம் கூறுகையில், ‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிராமப்புறங்களில் தரமான சாலைகள் போடப்பட்டுள்ளன. சில சாலைகள் நெடுஞ்சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு இன்றி உள்ளது. தற்போது ஓட்டப்பாலத்தில் நடைபெறும் பணிகள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறையும்’ எனக் கூறினார். பள்ளி மாணவர் ரிஷி கூறுகையில், ‘ஓட்டப்பாலம் பகுதியில் பள்ளிகள், எம்எல்ஏ அலுவலகம், வங்கி, நீதிமன்றம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், பள்ளிகளுக்கு செல்ல தாமதமாகிறது. தற்போது ரவுண்டானா அமைக்கப்படுவதால் இப்பகுதியில் வாகனங்கள் முறையாக செல்லும். போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்’ என்றார்.