விபத்தில் நஷ்டஈடு வழங்காததால் கலெக்டரின் காரை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு

விருதுநகர், மார்ச் 21: விபத்திற்கான நஷ்டஈடு வழங்காததால் கலெக்டரின் காரை அமீனா ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை வாகனம் 2013ல் மோதிய விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ரூ.65 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. அதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் ரூ.28 லட்சம் கட்டப்பட்ட நிலையில், நிலுவைத் தொகை ரூ.37 லட்சம் கட்டப்படாமல் இருந்து வருகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டில் 2020ல் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் கலெக்டரின் கார் மற்றும் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

மாவட்ட நிர்வாகம் தரப்பில் நிலுவை தொகையை கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து நேற்று கூடுதல் மாவட்ட நீதிமன்ற அமீனா, கலெக்டரின் காரை ஜப்தி செய்து நோட்டீஸ் ஒட்டுவதற்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிக்கந்தர் பீவி, கலெக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கலெக்டர் ஜெயசீலன், நீதித்துறை அதிகாரிகளிடம் பேசி 2 மாத அவகாசம் கோரியதை தொடர்ந்து அமீனா, திரும்பி சென்றார். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: