உளுந்தூர்பேட்டை அருகே கனமழை வடகுரும்பூர் கிராமத்தில் 1,000 பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்து சேதம்

உளுந்தூர்பேட்டை, மார்ச் 20: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் வடகுரும்பூர், எறையூர், புகைப்பட்டி, எலவனாசூர்கோட்டை, வெள்ளையூர், பாண்டூர், அரளி, காட்டு நெமிலி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. வட குரும்பூர் கிராமத்தில் நேற்று மாலை பெய்த ஆலங்கட்டி மழையால் சீனிவாசன் என்ற விவசாயி, சுமார் 7 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த 6 ஆயிரம் பப்பாளி மரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்தது. மேலும் ஆலங்கட்டி மழை பெய்ததால் அனைத்து மரங்களில் இருந்த பப்பாளி காய்கள் மற்றும் பழங்கள் சேதமடைந்தது.

இதுகுறித்து விவசாயி சீனிவாசன் கூறியதாவது, பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்ததுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பப்பாளி காய் மற்றும் பழங்களில் ஆலங்கட்டி மழை வேகமாக தாக்கியதில் அனைத்து காய்களும், பழங்களும் சேதமடைந்துள்ளது. நெல் மற்றும் உளுந்து உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்துவது போல் பப்பாளி பயிருக்கும் காப்பீடு திட்டம் செயல்படுத்த வேண்டுமென அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று மழையால் பப்பாளி பயிர் அதிகம் சேதமடைந்துள்ளது என்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: