திருப்போரூர் அருகே இள்ளலூரில் சாலை அமைக்க எதிர்ப்பு: அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு

திருப்போரூர், மார்ச்19: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய இள்ளலூர் ஊராட்சியில் செங்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள சங்கோதி அம்மன் கோயில் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலை அமைக்க தனியார் பங்களிப்புடன் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் அனுமதி அளித்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது. இதையடுத்து தனியார் நிறுவனத்தின் சார்பில் நேற்று முன்தினம் இரவு முதல் சாலை அமைக்க ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. இந்த பணிகள் இள்ளலூர் ஊராட்சி மன்ற தலைவர் மேற்பார்வையில் நடந்ததாக தெரிகிறது.

இதற்கு செங்காடு கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சியில் பல்வேறு சாலைகள் போடப்படாமல் உள்ள நிலையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஊராட்சி மன்ற தலைவர் நடப்பதாக கூறி சங்கோதி அம்மன் கோயிலை ஒட்டி சாலை அமைக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இள்ளலூர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்ட கொடுத்த தகவலின் பேரில் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இராதாகிருஷ்ணன், எஸ்.ஐ.க்கள் ராஜா, பன்னீர்செல்வம், நாராயணன் உள்ளிட்டோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியரின் மறு உத்தரவு வரும் வரை சாலை போடும் பணியை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டனர். தற்போது அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: