3ம் நாள் பங்குனி பிரம்மோற்சவ விழா கருட வாகனத்தில் வீதியுலா வந்த பெருமாள்: திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

காஞ்சிபுரம், மார்ச் 18: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தின், 3ம் நாளான நேற்று யதோக்தகாரி பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன், கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் 108  திவ்ய தேசங்களில் ஒன்றான யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த  புதன்கிழமை அன்று கொடியேற்றதுடன் தொடங்கியது. இதனால்,  யதோக்தகாரி பெருமாளுக்கு தினமும் காலை, மாலை என இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

அந்த  வகையில் 3ம் நாளான நேற்று, பெருமாள் கருட வாகனத்தில் சிறப்பு  அலங்காரத்தில் எழுந்தருளி, திருகச்சி நம்பி தெரு, செட்டி தெரு வழியாக வரதராஜ  பெருமாள் கோயில் வரை சென்று, மீண்டும் கோயிலுக்குள் எழுந்தருளினார். அப்போது, வழி எங்கிலும் சாமியை தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு  அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து  கொண்டு, ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டு பெருமாளை வணங்கி சென்றனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகத்தா நல்லப்பா நாராயணன் மற்றும்  விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: