ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வாகன கண்ணாடிகளை உடைத்து விலையுயர்ந்த பொருட்களை திருடிய 2 பேர் சிக்கினர்

ஊட்டி, மார்ச் 17: நீலகிரி மாவட்டம், சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்குள்ள சுற்றுலா தலங்களை காண தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் நகரில் உள்ள சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி நகருக்கு வெளியில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம் மற்றும் அருவி, சூட்டிங்மட்டம், பைன் பாரஸ்ட், லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு தங்களது வாகனங்கள் மூலம் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சுற்றுலா பயணிகளின் வாகனங்களை குறி வைத்து கண்ணாடியை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நகருக்குள் பார்க்கிங்கில் நிறுத்தும் வாகனங்களை உடைத்து திருடினால் மாட்டி கொள்வோம் என்பதால், நகருக்கு வெளியில் அமைந்துள்ள சுற்றுலா தல பார்க்கிங்கில் நிறுத்தும் வாகனங்களை குறி வைத்து அதில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை ஒரு கும்பல் திருடியது. குறிப்பாக ஊட்டி நகருக்கு வெளியில் உள்ள பைக்காரா, பைன் பாரஸ்ட், தொட்டபெட்டா சிகரம், டீ மியுசியம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி செல்லப்படும் வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டு பணம், லேப்டாப், செல்போன் மற்றும் காரில் இருக்கும் பிற விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின. கேரளா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து அந்த கும்பலை பிடிக்க ஊட்டி டவுன் டிஎஸ்பி யசோதா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மணிக்குமார், உதவி ஆய்வாளர் கனகராஜ் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை ேமற்கொண்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டபெட்டா சிகரத்தில் கேரளா மாநில சுற்றுலா பயணிகள் தங்களது வாகனத்தை அப்பகுதியில் நிறுத்தி விட்டு சுற்றி பார்க்க சென்று விட்டனர். காரில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது. இதையறியாமல், பைக்கில் அங்கு வந்த இருவர், காரை நோட்டம் விட்டனர். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததை உறுதிப்படுத்தி விட்டு, காரின் கண்ணாடியை உடைத்து திருடி சென்றனர்.

இதையடுத்து கேமிரா பதிவின் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்நிலையில், நேற்று காலை ஊட்டி - கோத்தகிரி சாலையில் சேரிங்கிராஸ் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் இருவர் சுற்றி திரிந்தனர். அவர்களை பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதியில் இருந்த சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், இருவரையும் பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், இருவரும் அண்டை மாநிலம் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. திருடிய பொருட்களை எங்கு வைத்துள்ளனர்? இவர்கள் பின்னணியில் பெரிய அளவிலான திருட்டு கும்பல் உள்ளதா எனவும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுற்றுலா பயணிகளின் வாகனங்களை குறி வைத்து ஊட்டியில் அரங்கேறிய திருட்டு சம்பவத்தில் இருவர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: