முதலமைச்சர் திட்டத்திற்கு உயிர் கொடுப்போம் போன் செய்தால் வீடுதேடி வந்து மரக்கன்று இலவசமாக நடுகிறோம்

பட்டுக்கோட்டை: மண்ணுக்கும், மனிதனுக்கும், எல்லா உயிருக்கும் உயிராக விளங்குவது மரங்கள் மரம் ஒரு வரம். தமிழக முதல்வரின் 33 சதவீதம் வனப்பரப்பாக்கும் திட்டத்தை உயிர் கொடுக்கும் விதமாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பட்டுக்கோட்டை நகர கடை வீதிகள் மற்றும் 33 வார்டுகளுக்குட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் தங்களது கைகளில் மரக்கன்றுகளை எடுத்துக்கொண்டு சைக்கிளில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்துகொண்டே வீடு தேடிச்சென்று மரக்கன்றுகளை இலவசமாக நட்டு வைத்து வருகின்றனர். இதன் தொடக்க விழா பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. விழாவில் நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார் திட்டத்தை துவக்கி வைத்ததுடன், நகராட்சி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் சுரேஷ், நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், சுகாதார அலுவலர் நெடுமாறன், நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் சைக்கிளில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ஒரு போன் செய்யுங்க என்று அந்த அலைபேசி எண்ணை (9710117573) சொல்லி இந்த எண்ணுக்கு அழைத்தால் போதும் நீங்கள் விரும்பிய மரக்கன்றுகளை, வேண்டிய எண்ணிக்கையில் உங்கள் வீட்டுக்கே நாங்கள் கொண்டுவந்து இலவசமாக நட்டுத் தருகிறோம் என்று கூறினர். இவ்வாறு கடைவீதி மற்றும் தெருக்களில் உள்ள பொதுமக்கள், இல்லத்தரசிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி மிகவும் வித்தியாசமான முறையில் முதல்வரின் 33 சதவீத வனப்பரப்பாக்கும் திட்டத்திற்கு வலு சேர்த்தனர். வேங்கை, புங்கை, பூவரசு, அரசு, அத்தி, புளி, முருங்கை, நீர்மருது, நாவல், மூங்கில், வேம்பு, செரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சமூக ஆர்வலர்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: