வெளியூர்காரர்களுக்கு புறம்போக்கு இடத்தை வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம், மார்ச் 16:  செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கடமலைப்புத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில், மலை அடிவாரப் பகுதியில் குன்று புறம்போக்கு மற்றும் பாட்டை பகுதியில் உள்ளது.  இங்கு, சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட புறம்போக்கு நிலத்தினை வீட்டு மனைகளாக மாற்றி மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு வழங்க மதுராந்தகம் வருவாய்த்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடமலைபுத்தூர் கிராம மக்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், இந்நிலத்தில் ஊராட்சியின் சார்பில் அரசு உயர்நிலை பள்ளி கட்டிடம் கட்ட ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை கட்டவும் எங்கள் ஊராட்சியின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, இந்த நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு வழங்கினால் எங்கள் ஊராட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, இந்த நிலத்தை வேறு நபர்களுக்கு வழங்க அனுமதிக்க முடியாது என கூறி அந்த மலையடிவார பகுதியில் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியாக செல்லும் கிராம சாலையிலும் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திங் ஈடுபட்டனர். இதில், ஊராட்சி மன்ற தலைவர் ராஜன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராமமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, அங்கு  வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அச்சிறுப்பாக்கம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: