தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திட்டப்பணிகளை நிறைவேற்ற நிதி வழங்குவதில் முதல்வர் முன்னுரிமை அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி), தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் நேற்று அடிக்கல் நாட்டினர். பின்னர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி), தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 214 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.248.67 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசால் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு 2,25,453 மக்கள் பயன் பெறும் வகையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளை சார்ந்த 144 குடியிருப்புகள், திருவையாறு ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளை சார்ந்த 15 குடியிருப்புகள், தஞ்சாவூர் ஒன்றியத்தில் 18 ஊராட்சிகளை சார்ந்த 55 குடியிருப்புகள் மற்றும் சாஸ்த்ரா பல்கலைக்கழகமும் பயன்பெறும் வகையில் நடப்பு நிதியாண்டில் திட்டம் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பூதலூர் ஒன்றியம், திருச்சென்னம்பூண்டி ஊராட்சி அருகில் கொள்ளிடம் ஆற்றில் புதிய நீர் சேகரிப்புக்கிணறு ஒன்றும் மற்றும் தோகூர் ஊராட்சி அருகில் காவிரி ஆற்றில் புதிய நீர்உறிஞ்சு கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டு அதிலிருந்து மின் மோட்டார் மூலம் 16.78 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு அகரப்பேட்டை கடம்பங்குடி. சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் புதிதாக கட்டப்படவுள்ள முறையே 2.05.2.70 மற்றும் 4.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் பகிரமான நிலையங்கள் மற்றும் நந்தவனப்பட்டி கிராமத்தில் பயன்பாட்டிலுள்ள 2.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் பகிர்மான நிலையம் மூலம் 190.715 கி.மீ. நீளத்திற்கு நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு 68 தரை மட்ட நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட உள்ளது. தரைமட்ட தேக்க தொட்டியிலிருந்து 255.91 கி.மீ. நீளம் குழாய்கள் பதித்து ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள 305 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள 23 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் பொது மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இத்திட்டமானது ஆகஸ்ட் 2024ல் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிகளில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைத்திட இன்று அடிக்கல் நாட்டப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதேபோல் திருவையாறு. திருக்காட்டுப்பள்ளி மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சிகளில் புதிய நவீன நூலக கட்டிடம் அமைத்திடவும் இன்று அடிக்கல் நாட்டி மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும். தஞ்சாவூர் மக்களுக்கு சேவை செய்வதை எங்களின் தலையாய கடமையாகும். தமிழகத்திற்கு நிதி ஒதுக்கினால் அதில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சேர்த்திட வேண்டும் ஏனென்றால் மற்ற மாவட்டங்களில் பல்வேறு தொழில்கள் உள்ளன. ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் தான் தமிழகத்துக்கு உணவு அளிக்கின்ற பெருமை மிகுந்த மாவட்டமாகும். ஆதனால் தமிழ்நாடு முதலமைச்சர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தேவையான நிதி வழங்குவதில் எப்பொழுதும் முன்னுரிமை வழங்குவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு). டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), கூடுதல் கலெக்டர் வருவாய் சுகபுத்ரா,குடிநீர் வடிகால் வாரியம் தலைமை பொறியாளர் முரளி, மேற்பார்வை பொறியாளர் கருணாகரன், நிர்வாக பொறியாளர் எழிலரசன், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: