சவுரிராஜபெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்

நாகப்பட்டினம்,மார்ச்14: திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகப்பெருவிழா 15 நாட்கள் நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு மாசி மகப்பெருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தங்க பல்லாக்கு திருமேனி சேவை, தங்க கருட சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து தேரோட்டம், திருப்பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. சவுரிராஜபெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார். கோயிலின் எதிரே அமைந்துள்ள நித்திய புஷ்பகரணி திருக்குளத்தில் மூன்று முறை நூதன பங்களாதெப்பம் என்ற தெப்பம் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: