சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை முதல்வர் பட்ஜெட்டில் அறிவித்து நிறைவேற்றி தருவார்

தூத்துக்குடி, மார்ச் 12: தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை எல்லாம் பட்ஜெட்டில் அறிவித்து நிறைவேற்றி தருவார் என்று தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் கூறினார். தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி, திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகளை உருவாக்கிடும் பொருட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறையுடன் இணைந்து 37லட்சம் குழந்தைகளுக்கு உயரம், எடை சரிபார்க்கப்பட்டுள்ளது. கூடுதல் சிகிச்சை தேவைப்படும் 47ஆயிரம் குழந்தைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை மூலம் உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து மட்டும் குறைபாடுள்ள குழந்தைகள், குழந்தை பெற்று 6 மாதமான தாய்மார்கள் ஆகியோருக்கு ஆரோக்கிய பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் 6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தினை உறுதி செய்யக்கூடிய சத்து இனிப்பும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம் இன்று முதல் நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக தேவைப்படும் அத்தனை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். வாக்குறுதியாக அளித்த திட்டங்கள் மட்டுமின்றி அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். முதல்வர் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை எல்லாம் பட்ஜெட்டில் அறிவித்து நிறைவேற்றி தருவார். அவர் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சியினை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சிக்காக கிரின் அம்மோனியா நிறுவனம், பர்னிச்சர் பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அதிக வேலைவாய்ப்பு, வருமானம் பெறும் வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளர். அரசின் திட்டங்களை பெற்று மக்கள் அனைவரும் பயனடையுங்கள் என்றார்.

முன்னதாக அவர், விதவைமகள் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 86பேருக்கும், அன்னைதெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ் 2 பேர், டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்புத்திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 12பேர் என மொத்தம் 100பயனாளிகளுக்கு ரூ.43.75லட்சம் மதிப்பில் திருமாங்கல்யத்திற்கு தங்க நாணயம் மற்றும் நிதியுதவி வழங்கினார். மேலும், அன்னை சத்திவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 77பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும், குழந்தை திருமணம், இளம்வயது கர்ப்பம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியிலிருந்து கோவில்பட்டி, கயத்தார் வட்டாரங்களில் குழந்தை திருமணம் இல்லாத சிறந்த 6 ஊராட்சி தலைவர்களுக்கு விருது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 12பயனாளிகளுக்கு ரூ.3.15லட்சம் நலத்திட்ட உதவிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் 30பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் ஆகியவற்றையும் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். இதில், தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட சமூகநல அலுவலர் ரதிதேவி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, திமுக பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: