என்எல்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ அருண்மொழிதேவன் உள்பட 50 பேர் அதிரடி கைது

சேத்தியாத்தோப்பு, மார்ச் 11:  சேத்தியாத்தோப்பு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ அருண்மொழிதேவன் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி சமன் செய்யும் பணியை நேற்று இரண்டாம் நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்.எல்சி நிர்வாகம் துவங்கியது.

இதனையறிந்து அங்கு சென்ற புவனகிரி அதிமுக எம்எல்ஏ,  அருண்மொழிதேவன் என்.எல்.சி அதிகாரிகளிடம் பணியை நிறுத்துமாறு கூறினார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி ராஜாராம் பேச்சு நடத்தினார். பின்னர் எம்எல்ஏ மற்றும் 50 அதிமுகவினர் சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் நடத்தினர். உடனே போலீசார் அனைவரையும் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று அடைத்து வைத்தனர். இதனையறிந்த வளையமாதேவி பொதுமக்கள் எம்.எல்.ஏவை விடுதலை செய்யக்கோரி விருத்தாசலம் -புவனகிரி நெடுஞ்சாலையில் போராட்டத்தில் இறங்கினர். அவர்களையும், போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

அதிமுக எம்எல்ஏ கைதுக்கு எடப்பாடி கண்டனம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் தர மறுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் புவனகிரி, கம்மாபுரம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள மக்களை,அவர்களது வீடுகளிலேயே காவல் துறையினரால் சிறை பிடிக்கப்பட்டது வெட்கக்கேடானது. இதனை எதிர்த்து, அவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், எம்எல்ஏவுமான அருண்மொழிதேவன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: