சாயல்குடி: கடலாடியில் புதிதாக துவங்கப்பட்ட அரசு ஐ.டி.ஐக்கு கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்ட பணிகளுக்கு ஆய்வு நேற்று நடந்தது. கடலாடி,சாயல்குடி,கன்னிராஜபுரம், வாலிநோக்கம், சிக்கல் உள்ளிட்ட கடலாடி ஒன்றிய பகுதியை சேர்ந்த கிராம மாணவர்களின் நலன்கருதி கடலாடியில் அரசு ஐ.டி.ஐ அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த நவ.25ம் தேதி அசாணை வெளியிடப்பட்டது.
ரூ.97.55 கோடி செலவில் கடலாடி மற்றும் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட 11 இடங்களில் இளைஞர்களுக்கு பயனுள்ள வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கும், தொழில் சாலைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கிட அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து டிச.1ம் தேதி முதல் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக புதிய அரசு ஐ.டி.ஐ துவங்கப்பட்டது. இதில் பிட்டர், வயர்மேன், ஏ.சி மெக்கானிக், மோட்டர் மெக்கானிக், எலக்ட்ரீசன் உள்ளிட்ட 5 பாடப்பிரிவுகளுடன் வகுப்புகள் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமபுற மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் இடம் தேர்வு நடந்து வந்தது. இதனையடுத்து நேற்று மீனங்குடி சாலையிலுள்ள ஐந்து மடை அருகில் உள்ள அரசு காலியிடம் தேர்வு செய்யப்பட்டது. இதனை நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் நேரில் ஆய்வு செய்தார். மண் பரிசோதனைகள் செய்த பிறகு விரைவில் கட்டிடம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது கடலாடி தாசில்தார் பரமசிவம், துணை தாசில்தார் சாந்தி, கடலாடி பஞ்சாயத்து தலைவர் ராஜமாணிக்கம் லிங்கம், வர்த்தக சங்க தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.