மக்கள் குறைதீர் கூட்டத்தில் 15 கலைஞர்களுக்கு விருது கலெக்டர் வழங்கினார்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் 15 கலைஞர்களுக்கு விருதுகளை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர்ட தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 375 மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களை வீசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் கூறினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர், தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைப் பண்புகளை சிற்பிக்கும் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 2021-2022ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞர்களுக்கு வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் கோபீஸ்வரன் (தவில் கலைஞர்), திவாஷ் (கராத்தே சிலம்பம் கலைஞர்), ஸ்ரீதுஸ்மிதா (ஓவியர் கலைஞர்), 18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு “கலை இளமணி” விருது மற்றும் ரூ. 4,000 காசோலையும், மணி (பரதநாட்டியக் கலைஞர்), வனிதா (கரகாட்டக் கலைஞர்), கார்த்திகேயன் (பொம்மலாட்டக் கலைஞர்) 19 வயது முதல் 35 வயது வரையிலான கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருது மற்றும் ரூ.6000 காசோலையும், பெல்லோரா பெனடிக்ட் (தப்பாட்டக் கலைஞர்), கார்த்திகேயன் (நாதசுரக் கலைஞர்) இளையராஜா (நாதசுரக் கலைஞர்) 36 வயது முதல் 50 வயது வரையிலான கலைஞர்களுக்கு “கலைச் சுடர்மணி” விருது மற்றும் ரூ.10,000 காசோலையும், நடேசன் (தவில் கலைஞர்), ஆபிரான்சிஸ் (நாடகக் கலைஞர்), பாலமுருகன் (பலதல் இசைக்கலைஞர்) 51 வயது முதல் 65 வயது வரையிலான கலைஞர்களுக்கு “கலை நன்மணி” விருது மற்றும் ரூ.15,000 காசோலையும், நடராஜன் (மிருதங்கக் கலைஞர்), பன்னீர்செல்வம் (தாடகக் கலைஞர்), காமாட்சி (கரகம்

பொய்க்கால் குதிரையாட்டக் கலைஞர்). 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் மற்றும் ரூ. 20,000 காசோலையும் என மொத்தம் 15 கலைஞர்களுக்கு வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுதிரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) காந்த, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மண்டல கலை பண்பாட்டு மையம் உதவி இயக்குனர் நீலமேகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: