உடன்குடி - குலசை சாலையில் பள்ளங்களால் அடிக்கடி விபத்து

உடன்குடி, மார்ச் 7: உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. எனவே, சாலையை சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலை, எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ -மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள், சுற்றுலாத்தலமான மணப்பாடு, கோயில் நகரமான குலசேகரன்பட்டினம் செல்பவர்கள் என தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இச்சாலையில் ஒருபுறத்தில் மட்டும் பள்ளங்கள் காணப்படுவதால் பள்ளம் இல்லாத பகுதியில் வாகன ஓட்டிகள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் மீதோ அல்லது பள்ளங்களில் விழுந்தோ விபத்தில் சிக்கி விடுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையில் உள்ள பள்ளம் தெரியாத காரணத்தால் அவ்வப்போது விபத்தில் சிக்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. எனவே இச்சாலையை சீரமைக்க வேண்டுமென உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் முகமது ஆபித், கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.

Related Stories: