காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில், திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில், கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 310 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், 2021-22ம் ஆண்டிற்கான வயது முதிர்ந்த 6 தமிழறிஞர்களுக்கு, மாதம் ரூ.4,000 வீதம் உதவித்தொகைக்கான அரசாணையையும், பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி சார்பில், மாற்றுத்திறனாளியான யூசப் செரீப்க்கு, தொழில் தொடங்க ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, உதவி கலெக்டர் அர்பித்ஜெயின், காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பாரதி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.