விராலிமலை,மார்ச்.6: அன்னவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் சிறப்பு பெற்ற விருத்தபுரீஸ்வரர் சமேத தர்மசம்வர்த்தினி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல நிகழாண்டும் திருவிழா கடந்த 25ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விழா நாட்களில் மண்டகபடிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. விழா நாட்களில் உபயதாரர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
