அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: 8ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

கடலூர், மார்ச் 5: அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை வழக்கில், வரும் 8ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கடலூரில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி, சிங்காரதோப்பு உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினந்தோறும், நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக, தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், கடலூர் துறைமுகம் சோனங்குப்பம் பகுதி மீனவர்களுக்கும் பிரச்னை இருந்து வந்தது.

இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் கடலூர் சோனங்குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான பஞ்சநாதன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை கடலூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில், விசாரணை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் 2 போலீசார் ஆஜராக வேண்டியிருப்பதாலும், ஆயுதங்களை சரியாக ஒப்படைக்காததாலும் விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சுபா அன்புமணி உத்தரவிட்டார். தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் பகுதியில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க, கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின் பேரில் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: