திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களின் செயல்பாடுகள்: சமூக நலத்துறை செயலாளர் ஆய்வு

திருமங்கலம், மார்ச் 5: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் உள்ள அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் சமூக நலத்துறை செயலாளர் நேற்று திடீர் ஆய்வு செய்து ஆவணங்கள் மற்றும் கணக்கு இருப்புகளை சரிபார்த்தார். தமிழ்நாடு சமூக நலத்துறை செயலாளர் சுங்கோங்கோம் சடச்சிறு நேற்று திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் பஞ்சாயத்துகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். உச்சப்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் சத்துணவு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் முட்டை உள்ளிட்டவை தரமானதாக உள்ளனவா, இருப்பு சரியாக உள்ளதா என ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஸ்மார்ட் வகுப்பில் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

இதையடுத்து அருகேயுள்ள பாலர்வாடி மையத்தில் ஆய்வு நடத்தி சத்தான உணவுகள் வழங்கப்படுகிறதா, மாணவர்களின் எடை, உயரம் சரியாக உள்ளதா என பரிசோதனை செய்தார். இதனை தொடர்ந்து மறவன்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட அங்கன்வாடி மையத்தில் உள்ள சின்னஞ்சிறு குழந்தைகளுடன் படிப்பு குறித்து கேட்டறிந்ததுடன், விரல் நகங்கள் மற்றும் தலைமுடியை முறையாக வெட்டிக்கொள்ள வேண்டும் என அறிவுத்தினார். இதேபோல் நகராட்சி தெற்குத்தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) உமா மகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் காந்திமதி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சங்கர் கைலாசம், பஞ்சாயத்து தலைவர்கள் உச்சப்பட்டி பிச்சையம்மாள், மறவன்குளம் ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: