தென்காசி, மார்ச் 3: தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ- மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு ஆர்வமூட்டும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அருகேயுள்ள கல்லூரிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் மாவட்டத்தில் உள்ள 53 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 530 மாணவ- மாணவிகள் அருகேயுள்ள சுரண்டை, அரசு கலைக்கல்லூரி, சங்கரன்கோவில், அரசு கலைக்கல்லூரி, கடையநல்லூர், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆலங்குளம், ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி குற்றாலம் ஆகிய ஆறு கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இக்களப்பயணத்தை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மேற்கொண்டனர். முதன்மை கல்வி அலுவலர் கபீர் கல்லூரி களப் பயணத்தை துவக்கிவைத்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் முறையாக இது போன்ற முயற்சி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே உயர் கல்விக்கான ஆர்வத்தையும், பள்ளி படிப்பு முடித்த பின்னர் கல்லூரிகளில் தங்களுக்கான துறையை தேர்ந்தெடுப்பதில் உள்ள குழப்பங்களிலிருந்து தெளிவும், உயர் கல்வியில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிந்து கொண்டனர். கல்லூரி வளாகம், கல்லூரிகளில் செயல்படும் துறைகள் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கலையரங்கம், நூலகம், பல்வேறு விளையாட்டு மைதானம் ஆகியவற்றை நேரடியாக சென்று பார்வையிடுவதால் உயர் கல்வி குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
