அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி நகர்மன்ற அவசர கூட்டம் நகர்மன்ற கூட்டரங்களில் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தலைமையில் நடந்தது, நகராட்சி கமிஷனர் அசோக்குமார், நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், உதவிபொறியாளர் முரளி, நகர்நலஅலுவலர் ராஜநந்தினி, மேலாளர் சங்கர்கணேஷ், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, வரைவாளர் சுமதி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு, பாலசுப்பிரமணி (சிபிஎம்) மலையரசன் கோவில் கண்மாய் நீர்வரத்து பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மழை பெய்தால் திருநகரம் பகுதி மழைநீரால் மூழ்கிவிடும். ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. பழனிச்சாமி (துணைத்தலைவர்) நீர்வரத்து பாதைகள் பட்டா வாங்கியுள்ளனர். நிலங்களை கையகப்படுத்த தாசில்தாருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம். கண்ணன்(திமுக) புதிய பேருந்து நிலையத்திலிருந்து காந்திநகர் வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள். காந்திமதி (திமுக) எனது 29வது வார்டில் தில்லைகோவிந்தன் தெருவில் நகராட்சி இடத்தில் தனியார் கடை கட்டியுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை எடுங்கள். கண்ணன் (திமுக) எனது பகுதியில் திறக்கப்பட்ட ரேசன் கடை 3 மாதமாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. மீனாட்சி (திமுக) நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. நாய்களுக்கு உள்ள உரிமை மனிதர்களுக்கு இல்லையா தெருவிற்கு 10 நாய்கள் சுற்றி திரிகிறது. குழந்தைகள் தெருவில் விளையாட முடியவில்லை. நாய்களை கட்டுப்படுத்துங்கள்.ராஜநந்தினி (நகர்நல அலுவலர்) ஒரு மாத காலத்திற்குள் நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்படும்.ஜெயகவிதா (திமுக) எனது வார்டிற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் இடையூறாக இருப்பதாக கூறி தீர்மானம் நிறைவேற்ற கூறினேன். அதன்படி டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாவட்ட ஆட்சியருக்கு மன்றத்தில் தீர்மானம் வைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஜெயகவிதா (திமுக) மாடுகள் தெருக்களில் சுற்றி திரிகிறது. குழந்தைகள் நடமாட முடியவில்லை. மாடுகளை கட்டுப்படுத்துங்கள்.
சுந்தரலட்சுமி (நகர்மன்றத்தலைவர்) மாடுகளை தெருக்களில் விடக்கூடாது என்று பலமுறை கூறியும் மாட்டின் உரிமையாளர்கள் கேட்கவில்லை. தொடர்ந்து மாடுகளை தெருக்களில் விட்டால் பிடித்து ஏலம் விடப்படும். சிவப்பிரகாசம் (முன்னாள் நகர்மன்றத்தலைவர்) நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். மேலும் கண்மாய்களுக்கு மழைநீர் செல்லும் நீர்வழிப்பாதைகளில் யார் பட்டா வாங்கி இருந்தாலும் ரத்து செய்ய வருவாய் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகராட்சி பொதுமயானத்தில் 36 லட்சம் ரூபாய் செலவில் தியானம் மண்டபம் அமைக்கப்படும். மேலும் சாய்பாபா காலனியில் 34 லட்சம் செலவிலும், மாணிக்கம் நகரில் 25 லட்சம் செலவிலும் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது என கூறினார். மேலும் கூட்டத்தில் இன்று 70வது பிறந்தநாள் கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு விவாதம் நடந்தது. 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.