தேனியில் சிறு,குறு நிறுவனங்களுக்கு தொழிற்கடன் வழங்கும் முகாம்

தேனி, பிப். 24: தேனியில் நடந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வழங்கும் முகாமில் 244 பேருக்கு கடன்களை கலெக்டர் வழங்கினார். தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் தொழில்முனைவோர் உள்ளிட்டோருக்கு நேற்று தொழிற்கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு தொழில் வணிக துறை ஆணையர் தாமஸ்வைத்யன் தலைமை வகித்தார். தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின்போது சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் மூலம் 244 பேருக்கு ரூ.30 கோடியே 58 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளை தொழில் வணிகத் துறை ஆணையர் தாமஸ்வைத்யன் மற்றும் கலெக்டர் ஷஜீவனா ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் தொழில் வணிகத் துறை ஆணையர் தாமஸ் வைத்யன் பேசும்போது, ‘‘ சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழிற்கடன்கள் வேண்டி விண்ணப்பிக்கும்போது கடன் பரிசீலனையில் ஏற்படும் கால தாமதத்தை வங்கியாளர்கள் தவிர்த்திட வேண்டும். சிஜி்டிஎம்எஸ்இ திட்ட அடிப்படையில் பிணையில்லா தொழிற்கடன் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும். சிபிள் ஸ்கோர் குறைபாடு இருந்தாலும் தொழில் முனைவோர் கடன்களுக்கான நிலுவைத் தொகை செலுத்தி தடையில்லா சான்று கொண்டுவரும்போது தாமதமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அசோகன், உதவி இயக்குநர் தாண்டவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: