கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இறுதி கட்ட மலர் நாற்றுகள் நடவு பணி
கொடைக்கானல், பிப். 23: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக இறுதி கட்ட மலர் நாற்றுகள் நடவு பணி துவங்கியுள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் முக்கியமான இடம் பிரையண்ட் பூங்கா. இப்பூங்காவில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள 60வது மலர் கண்காட்சிக்காக மலர் நாற்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இரண்டு கட்டமாக மலர் நாற்றுகள் நடும் பணி முடிவடைந்த நிலையில் நேற்று மூன்றாவது அல்லது இறுதி கட்ட மலர் நாற்றுக்கள் நடும் பணி துவங்கியது. சுமார் ஒரு லட்சம் மலர் நாற்றுக்கள் நடும் பணி 20 நாட்கள் நடைபெறவுள்ளது. பேன்சி, காலண்டூலா, மினி சால்வியா, மேரி கோல்ட், டயாந்தஸ், ஸ்டாக், உள்ளிட்ட பல்வேறு ரக மலர் நாற்றுக்கள் நடப்பட்டு வருகின்றன. 60வது மலர் கண்காட்சியின் போது சுமார் ஒரு கோடி மலர்கள் இந்த பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் வகையில் இந்த மலர் நாற்றுகள் நடும் பணி, பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது இத்தகவலை பிரையன்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.
