கும்பகோணம் மாநகர பகுதியில் குற்றசம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்

கும்பகோணம், பிப்.21: கும்பகோணம் பகுதியில் மதுபான விற்பனை, கஞ்சா விற்பனை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் 9498234785 என்ற தனது தனிப்பட்ட வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என கும்பகோணம் டிஎஸ்பி மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். கும்பகோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி மகேஷ்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கும்பகோணம் பகுதியில் டிஎஸ்பியாக பதவிஏற்றது முதல் கும்பகோணம் பகுதியில் நடைபெறும் குற்றச்செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் நிம்மதியாக வாழவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

கும்பகோணம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு பொதுமக்களும் தங்களது ஒத்துழைப்பையும், உதவியையும் போலீசாருக்கு கொடுத்தால் நிச்சயம் கும்பகோணம் மாநகரில் எந்தவித குற்றச்சம்பவங்களும் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். இரவு நேரங்களில் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் நிம்மதியாக உறங்குவதற்கு போலீசார் கண்விழித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் சமூக விரோதிகள் இரவு நேரங்களிலேயே குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் அவர்களை கண்காணித்து கொடுப்பதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் அத்தியாவசிய தேவை இல்லாமல் இரவு நேரங்களில் வெளியிடங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் செயல்படும் கடைகளுக்கும், மாநகர பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகள் போலீஸ் துறையால் விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும். மேலும் பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் குறித்து 9498234785 என்ற எனது தனிப்பட்ட வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தகவல் தெரிவிக்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும்.இவ்வாறு டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.

Related Stories: