மயிலாடுதுறையில் பரபரப்பு கொள்ளிடம் அருகே தற்காலிகமாக சீரமைப்பு

கொள்ளிடம்,பிப்.21: கொள்ளிடம் அருகே ஆற்றங்கரை சாலை தற்காலிகமாக சீரமைப்பதற்கு பதிலாக நிரந்தரமாக புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியிலிருந்து சந்தபடுகை, திட்டு படுகை, முதலைமேடு, மகேந்திரப்பள்ளி, காட்டூர் வரை கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை உள்ளது. இந்த சாலை மேம்படுத்தப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலான நிலையில் மழை காலத்தில் இந்த சாலையில் உடைப்பு ஏற்படும் இடங்களில் மட்டும் தற்காலிகமாக மணல் மூட்டைகளை போட்டும் செம்மண் போட்டும் சரி செய்து வருகின்றனர்.

இதனால் தொடர்மழை பெய்யும் போது ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும்போதும் ஆற்றங்கரையின் சாலை மேலும் வலுவிழந்து உடையும் தருவாயை எட்டுகின்ற நிலையில் அதிகாரிகள் அவசர அவசரமாக சம்பவ இடங்களுக்கு சென்று போர்க்கால அடிப்படையில் உடைப்பு ஏற்பட்ட இடங்களை சரி செய்து வருகின்றனர். வருடந்தோறும் மழைக்காலங்களில் இப்படி ஏற்படுகின்ற உடைப்பை தற்காலிகமாக சரி செய்து அத்துடன் நிறுத்தி விடுகின்றனர். பின்னர் அடுத்த வருடம் வரும்போது பருவ மழையின் போது மீண்டும் கரையின் மெலிந்த பகுதிகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த கரையை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களை சேர்ந்த அனைவரும் கொள்ளிடம் மற்றும் சீர்காழி, சிதம்பரம் பகுதிக்கு வந்து செல்வதற்கு ஆற்றங்கரை சாலையை பிரதான சாலையாக பயன்படுத்தி வந்து செல்கின்றனர். பலர் கால்நடையாகவே சாலையை கடந்து வருகின்றனர். இப்படி ஆற்றங்கரை சாலை முக்கிய சாலையாக கிராம மக்களுக்கு இருந்து வருகிறது. இருந்தும் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் போது கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் திட்டுப் பகுதியில் உள்ள கிராம மக்களுக்கும் இந்த ஆற்றங்கரை சாலை கேடயமாக இருந்து பாதுகாத்து வருகிறது.

மழைக்காலத்தில் அதிக நீர்வரத்து ஆற்றில் ஏற்படும் போது ஆற்றங்கரை உடைந்தால் பேராபத்தை சந்திக்கும் அபாய சூழல் நிலவி வருகிறது. ஆனால் ஆபத்தை உணராமல் கொள்ளிடம் ஆற்றங்கரையின் வலது கரை சாலையை தற்காலிகமாக மட்டுமே மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. ஆனால் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் இந்த ஆற்றங்கரை சாலை பக்கவாட்டில் அணைக்கப்பட்டிருந்த மண் சுமார் மூன்று மீட்டர் அகலத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு விட்டது. மீதமுள்ள மண் பகுதி மட்டுமே சாலையை ஒட்டிக்கொண்டு காணப்படுகிறது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றங்கரை முழுவதுமாக மேம்படுத்தப்பட்டது.அப்போது மண்ணைக் கொண்டு கரை அகலப்படுத்தியும் பலப்படுத்தியும் மேம்படுத்தப்பட்டது.அப்போது சாலையில் அணைக்கப்பட்ட மண் தற்போது மழையில் கரைந்து போய்விட்டது.

எனவே கொள்ளிடம் ஆற்றங்கரையின் வலது கரை சாலையை கரையோர கிராம மக்களின் வாழ்க்கையை காப்பாற்றும் பொருட்டு முன்பு கரை எந்த அளவுக்கு அகலமாக இருந்ததோ அதே அளவுக்கு மேம்படுத்தவும் உடைப்பு ஏற்பட்ட இடங்களை நிரந்தரமாக அடைத்து சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: