சோத்துப்பாறை அணை பாசன நீர் திறக்கும் முன் வாய்க்கால்களில் உடைப்பை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

பெரியகுளம், அக். 1: சோத்துப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், வாய்க்கால்களில் உள்ள உடைப்புகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து அடுத்த மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதில், புதிய ஆயக்கட்டு பகுதியான கைலாசபட்டி, கோவில்காடு, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள 1,040 ஏக்கர் நேரடி பாசனம் பெறும். மேலும், நிலத்தடி நீர் உயர்வால் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பாசன வசதி பெறும். இந்நிலையில், பாசனத்திற்கு நீர் கொண்டு செல்லும் வாய்க்காலில், பெரிய உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால், முழுமையாக பாசனத்திற்கு நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாசனத்திற்கு நீர் திறக்க 15 முதல் 20 நாட்களே உள்ள நிலையில், வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும். அப்போதுதான் கடைமடை வரை பாசன நீர் செல்லும். வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பு குறித்து, பெரியகுளம் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை இல்லை என புதிய ஆயக்கட்டு விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, தண்ணீர் திறப்பதற்கு முன்பாக வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து, பாசன நீர் தங்கு தடையின்றி செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: