கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கொடைக்கானல், அக். 1: கொடைக்கானல் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. ஆர்டிஓ ராஜா தலைமை வகிக்க, தாசில்தார் முத்துராமன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பாண்டியராஜா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள், ‘கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேத்துப்பாறை, வில்பட்டி இணைப்பு சாலை அமைக்க வேண்டும், மன்னவனூர் முதல் உடுமலைப்பேட்டை வரை புதிய சாலை அமைக்க வேண்டும். மேல்மலையில் நீர்நிலை பகுதிகளை ஒட்டி உள்ள எழும்பள்ளம் ஏரி, கோணலாறு பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடகவுஞ்சி கடமன்றேவு இடைப்பட்ட பகுதியில் ஆதிவாசி குடியிருப்பு பகுதிக்கு செல்ல சாலை வசதி அமைத்து தர வேண்டும். தாண்டிக்குடி பகுதியில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்மலையில் சாலை ஓரங்களில் வெட்டப்பட்டு குவித்து வைத்துள்ள மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலை, கீழ்மலை பகுதியில் கால்நடை மருத்துவர் உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். உடுமலை வனச்சரக கட்டுப்பாட்டில் உள்ள மேல்மலை பகுதியினை கொடைக்கானல் வனச்சரக கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேல்மலையில் மின்தடையை சீர்செய்ய போதிய மின் பணியாளர்கள் நியமிக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் விடுத்தனர்.இதற்கு ஆர்டிஓ, ‘விவசாயிகளின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும்’ என தெரிவித்தார்.

Related Stories: