பேட்டையில் சிதிலமடைந்த சாலை சீரமைப்பு பணி துவக்கம்

பேட்டை, செப்.28: நெல்லையிலிருந்து வீரவநல்லூர், பத்தமடை, பாப்பாக்குடி, முக்கூடல், சேரன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், இதேபோல் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நெல்லைக்கு தினமும் ஏராளமானோர் கல்வி மற்றும் பிற வேலைகளுக்காக பேட்டை வழியாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். அத்தியாவசியமிக்க இந்த சாலையில் நெல்லை டவுனை அடுத்த காட்சி மண்டபம் முதல் குளத்தங்கரை பள்ளிவாசல் வரை குண்டும் குழியுமாய் உருக்குலைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்வோர் கடும் அவதிக்குள்ளாக்கின்றனர்.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் உயிரை கையில் பிடித்தவாரே ஒருவித அச்சத்துடன் பயணிகின்றனர். சாலையை விரைந்து சீரமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறத்தினர். இதுகுறித்த செய்தி கடந்த 25ம்தேதி தினகரனில் வெளியானது. இதையடுத்து டவுன் காட்சி மண்டபம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து பேட்டை குளத்தங்கரை பள்ளிவாசல் வரையிலான சுமார் 800 மீட்டர் சாலை  சீரமைக்கும் பணி துவங்கியது.

இதில் முதல் கட்டமாக காமாட்சி அம்மன் கோயில் மண்டபம் அருகில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சாலையின் வலதுபுறம் வடிகால் அமைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து சாலையில் தண்ணீர் தேங்கும் பகுதி நிரப்பப்பட்டு புதிய சாலை அமைக்கும் பணி நடைபெறும் என்றும், கோடீஸ்வரன் நகர் அருகில் இருந்து குளத்தங்கரை பள்ளிவாசல் வரையிலான சாலை 5.5 மீட்டர் அகலத்தில் இருந்து 7 மீட்டர் அகலமாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 சில ஆண்டுகளாக இந்த சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டாமல் இருந்த நிலையில் தினகரன் செய்தி எதிரொலியாக புதிய சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: