நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் ரூ.4.30 கோடி விற்பனைக்கு இலக்கு

நெல்லை, செப்.28: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை கோ-ஆப்டெக்ஸ் மூலம் நடப்பு ஆண்டில் ரூ.4.30 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் துவக்கி வைக்க பாளை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்த மரியா பெற்றுக் கொண்டார். பின்னர் ஆர்டிஓ சந்திரசேகர் கூறுகையில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ரகங்கள், பட்டுப் புடவைகள் 30 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை சந்திப்பு காந்திமதி விற்பனை நிலையம், பாளை விற்பனை நிலையம், நெல்லை டவுன் கீழரதவீதி, நெல்லை டவுன் பட்டு மாளிகை ஆகிய இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2021) ரூ.2.73 கோடிக்கு ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன. நடப்பு ஆண்டில் (2022) ரூ.4.30 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 மேலும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக `கனவு நனவு திட்டம்' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 10 மாத தவணைகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12வது தவணை தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்தும். முதிர்வு தொகை மூலம் 20 சதவீத தள்ளுபடியில் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ஜவுளி ரகங்களை சிறப்பு தள்ளுபடியில் பெற்று பயனடைந்து நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு நெல்லை ஆர்டிஓ சந்திரசேகர் கூறினார். நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்) அன்பரசு, காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: