கோவை மாவட்டத்தில் கூடுதலாக 10 சார் பதிவாளர் அலுவலகம்

கோவை, செப்.28: கோவை மாவட்டத்தில் பத்திர பதிவு பணிகளை அதிகரிக்க, கூடுதலாக 10 சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இரண்டு இணை சார் பதிவாளர் அலுவலகம் உட்பட 17 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பதிவு அலுவலகங்களில் உரிய நேரத்தில் பதிவு பணிகள் முடிவதில்லை. பதிவு செய்ய வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதற்கேற்ப பணிகள் நடப்பதில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தை இரண்டு பதிவு மாவட்டங்களாக பிரிக்க பத்திர பதிவு துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

கோவை வடக்கு, கோவை தெற்கு என இரு மாவட்டங்களாக பிரித்து இரண்டு மாவட்ட பதிவாளர்கள் நியமித்து பணிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக பதிவு பணிகள் வேகமாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட சில பத்திர பதிவு அலுவலகங்களில் இரவு நேரங்களில் பத்திர பதிவு பணி நடக்கிறது. கூடுதலாக சார் பதிவாளர் நியமித்தும் பதிவுகள் தாமதமாகி வருகிறது. இதை தவிர்க்க, மாவட்ட அளவில் கூடுதலாக 10 சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பெரியநாயக்கன்பாளையம், சூலூர் உள்ளிட்ட 6 சார் பதிவாளர் அலுவலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சில கிராமங்களை புதிய சார் பதிவாளர் அலுவலக எல்லையில் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிக கிராமங்கள் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் இரண்டாக பிரிக்கப்படவுள்ளது. வெள்ளலூர், மலுமிச்சம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக சார் பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படும். இதற்கான அனுமதி உத்தரவு விரைவில் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

சில கிராமங்களின் புல எண்கள் அதன் முதன்மை கிராமங்களில் இடம் பெறாமல் வேறு சார் பதிவாளர் அலுவலக எல்லையில் இருப்பதாக தெரிகிறது. மாவட்ட அளவில் இந்த எல்லை பிரச்னையை தீர்க்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. சார் பதிவாளர் அலுவலக எல்லை கிராமங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. பட்டா பெயர் மாறுதல் பணியை எளிதாக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யும்போதே பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தாலுகா, சர்வே துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் முறையாக பட்டா மாறுதல் செய்யாமல் காலம் கடத்தி வருவதாக தெரிகிறது.

இதை வருவாய்த்துறையினர் கவனித்து விரைவாக பட்டா மாறுதல் செய்யவேண்டும். சில இடங்களில் பட்டா விவகாரங்களால் பத்திரப்பதிவு முடங்கி வருகிறது. இதை தவிர்க்க வருவாய்த்துறையினர் பட்டாக்களில் தவறு ஏற்படாமல் கவனிக்கவேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. தமிழ் நிலம் இணைய தளம் மூலமாக தற்போது பட்டா மாறுதல் பணிகள் வேகமாக்கப்பட்டு வருகிறது. தினமும் மாவட்ட அளவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் நடக்கிறது. முகூர்த்த நாள், விசேஷ நாட்களில் பத்திரப்பதிவு செய்ய கூட்டம் குவிவதால் பத்திரப்பதிவுத்துறையினர் தவிப்படைந்துள்ளனர்.

பதிவு அலுவலகங்களில் ஆள் பற்றாக்குறையை சரி செய்ய  தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வில்லங்க சான்று, சான்று நகல், திருமண பதிவு, சங்கங்கள் பதிவு பணிகளை கால தாமதம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் சார் பதிவாளர் அலுவலகங்களில் மாவட்ட பதிவாளர் தலைமையில் தணிக்கை ஆய்வு பணிகளும் நடத்தப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவுகளில் விதிமுறை மீறல் இருக்கக்கூடாது. சரியான காரணமின்றி பத்திரங்களை பதிவு செய்யாமல் நிறுத்தி வைக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: