போலீசார் கட்டுப்படுத்த கோரிக்கை அருப்புக்கோட்டையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் பள்ளி மாணவர்கள்

அருப்புக்கோட்டை, செப். 27: அருப்புக்கோட்டை பகுதியில் பஸ்களின் படிக்கட்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படும் விபத்து குறித்து போலீசாரும், கல்வி நிறுவனங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அதிகமாக உள்ளன. இந்த கல்வி நிலையங்களில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மேலும், கல்வி நிறுவனங்கள் சார்பில் பஸ், வேன்கள் இயக்கப்படுகின்றன. கிராமப்புற மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்களை பயன்படுத்துகின்றனர். கிராமப்புறங்களில் போதிய பஸ் வசதி இல்லாததால், இயக்கப்படும் ஒரு சில பஸ்களில் மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

குறித்த நேரத்திற்கு பள்ளி, கல்லூரி செல்ல பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்கின்றனர். இவர்களை பஸ் டிரைவர், கண்டக்டர் கண்டுகொள்வதில்லை. மேலும், பெரும்பான்மையான மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்கின்றனர். இதைப் பார்க்கும் பெற்றோர் விபத்து அச்சமடைகின்றனர். பஸ் செல்லும்போது திடீரென பிரேக் பிடித்தாலோ, வளைவிலோ சிறிது தடுமாறினாலும், படியில் தொங்கிச் செல்லும் மாணவர்கள் கீழே விழ வாய்ப்புள்ளது. இந்த படிக்கட்டு பயணம் தொடர்கிறது. படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவர்கள் தவறி விழுந்து பலியான சம்பவங்களும் தமிழகத்தில் நடந்துள்ளன.

எனவே, போக்குவரத்து போலீசாரும், பள்ளி, கல்வி நிறுவனங்களும் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்களும் அறிவுறுத்த வேண்டும். மேலும், பள்ளி நேரங்களில் கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: