விசைத்தறி உரிமையாளர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம்

சோமனூர், செப். 23: கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினரின் அவசர பொதுக்குழு கூட்டம் சோமனூரில் நேற்று நடந்தது. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி கடந்த ஒரு வாரமாக விசைத்தறிகளின் இயக்கத்தை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்கத்தின் கீழ் 110 கிளை சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல்லடம், கண்ணம்பாளையம், மங்கலம், ஆகிய மூன்று கிளை சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை.

நேற்று தெக்கலூர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்று விசைத்தறிகளை இயக்கத் தொடங்கினர். இதற்கிடையே சோமனூர் சங்கம் சார்பில் அவசர பொதுக்குழுகூட்டம் கோமக்காட்டுபுதூர் சிவசக்தி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத் துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பொருளாளர் பூபதி பேசியதாவது: விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கடந்த 20ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மின் கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து விளக்கம் அளிப்பதற்கு கடந்த 21ம் தேதி கோவை கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெற்றது. இந்த முடிவுகளை ஓரிரு நாட்களில் விசைத்தறியாளர்களுக்கு சாதகமாக அறிவிப்பதாக மின் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் விசைத்தறியாளர்கள் அமைச்சரின் அறிவிப்பு வந்தவுடன் விசைத்தறி வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார். இக்கூட்டத்தில் விசைத்தறி சங்க துணை செயலாளர் ஈஸ்வரன், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Related Stories: