பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரம்: பாளையில் களைகட்டும் தசரா திருவிழா

நெல்லை, செப்.21: பாளை அம்மன் கோயில்களில் தசரா திருவிழாவுக்காக பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் விழாகளைகட்டி வருகிறது. உலக பிரசித்தி பெற்ற தசரா பண்டிகை கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலும், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையிலும் வெகு விமரிசையாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா திருவிழா வரும் 24ம்தேதி மாலையில் அம்மனுக்கு மாகாப்பு அலங்காரத்துடன் துவங்குகிறது.

25ம்தேதி காலையில் பால்குட ஊர்வலம்,  ஆயிரத்தம்மன், தூத்துவாரி அம்மன் கோயில்களில் இருந்து சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில் என 8 ரதவீதிகளில் கொடி பட்டம் ஊர்வலம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு மேaல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் ஆயிரத்தம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. 26ம்தேதி பந்தல் கொடி ஏற்றுதல் வைபவம் நடக்கிறது. இதையடுத்து நவராத்திரி விழாவையொட்டி ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், தூத்துவாரி அம்மன், முப்பிடாதி அம்மன், உலகம்மன், புது உலகம்மன், யாதவர் உச்சினிமாகாளி அம்மன், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், தெற்கு, வடக்கு முத்தாரம்மன், விஸ்வகர்மா உச்சினிமாகாளி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோயில்களில் தசரா விழா துவங்குகிறது.

இதைதொடர்ந்து நவராத்தி விழாவில் அம்மன் கொலுவீற்றிருக்கும் வைபவம் தொடங்குகிறது. தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் வைபவம் நடக்கிறது. அக்.5ம் தேதி விஜயதசமி அன்று 10ம் தசரா விழாவன்று காலையில் 12 அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடும், இரவில் சப்பரங்கள் புறப்பட்டு வந்து ஆயிரத்தம்மன் கோயிலில் பூஜை நடத்தப்பட்டு சிவன் கோயில் ரதவீதிகள் வழியாக சென்று ராமசாமி கோயில் திடல் சென்றடைகிறது. அக். 6ம்தேதி அங்கிருந்து புறப்பட்டு கோபால சுவாமி கோயில் பகுதி வந்தடைந்து மாலையில் அங்கிருந்து ஊர்வலமாக பாளை மார்க்கெட் பகுதி வந்து பொதுமக்கள் தரிசனத்திற்காக அணிவகுத்து நிறுத்தப்படுகிறது.

இரவு 12 மணிக்கு 12 அம்மன் சப்பரங்களும் பாளை மாரியம்மன் கோயில் எதிரேயுள்ள எருமைக்கடா மைதானத்தில் அணிவகுத்து நிற்க ஆயிரத்தம்மன் சூரசனை சம்ஹாரம் செய்யும் வைபவம் நடக்கிறது. தசரா பண்டிகைக்காக பாளை பகுதியில் உள்ள ஆயிரத்தம்மன் கோயில் உள்பட 12 அம்மன் கோயில்களில் பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாளை பகுதி அம்மன் கோயில்களில் தசரா பண்டிகை களைகட்ட துவங்கி உள்ளது.

Related Stories: