ஓணம் பண்டிகை விடுமுறை கேரள பக்தர்கள்பழநியில் குவிந்தனர்

பழநி, செப். 10: ஓணம் பண்டிகை விடுமுறையால் பழநி கோயிலுக்கு கேரள மாநில பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு கேரள மாநில பக்தர்கள் அதிகளவு வருவது வழக்கம். கேரள மாநில பக்தர்கள் முருகனை தங்களது குலதெய்வமாக நினைத்து வழிபாடு செய்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் நேற்று முன்தினம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து ஏராளமான கேரள மாநில மக்கள் நேற்று பழநி கோயிலை நோக்கி படையெடுத்திருந்தனர். இதனால் பழநி நகரில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.    தவிர, முகூர்த்தநாள் என்பதால் கூடுதல் கூட்டம் உண்டானது. இதனால் அடிவார பகுதி முழுவதும் பக்தர்கள் தலைகளே தென்பட்டன. சன்னதி வீதி, கிரிவீதிகளில் பக்தர்கள் அங்குமிங்கும் சென்ற வண்ணம் இருந்தனர். வின்ச், ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்திற்கு பக்தர்கள் சுமார் 3 மணிநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அன்னதானத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்தினர்.

Related Stories: