ஈரோடு கே.கே. நகர் ரயில்வே நுழைவு பாலத்தில் ஏற்படும் வாகன நெரிசல் தவிர்க்க மேம்பாலம்

ஈரோடு, ஆக. 26: ஈரோடு கே.கே. நகர் ரயில்வே நுழைவு பாலத்தின் சாலையில் ஏற்படும் கடும் வாகன நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னிமலை சாலை கே.கே.நகர் பகுதியில் ஆங்கிலேயேர்கள் காலத்தில் கட்டப்பட்ட ரயில்வே நுழைவு பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக தான் ரங்கம்பாளையம், வெள்ளோடு, சென்னிமலை, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் சென்று வருகின்றன. பாலத்தின் உயரமும், நுழைவும் குறுகியது என்பதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குறுகிய பாலத்தின் வழியாக ஒரே நேரத்தில் இரு மார்க்கத்தில் வரும் வாகனங்கள் செல்ல முடியாது என்பதால், ஒரு வாகனம் சென்றபின்னர் தான், மறு மார்க்கத்தில் உள்ள வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இப்பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் அதிகரித்துள்ளதால், வாகன போக்குவரத்தும் கே.கே.நகர் நுழைவு பாலத்தில் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக பீக் அவர்ஸ் எனப்படும் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைகளுக்கு செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால், கே.கே.நகர் நுழைவு பாலத்தில் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மேம்பாலம் அமைத்து தர தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: