பழநி வழித்தடத்தில் நிறுத்திய ரயில்களை இயக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை

பழநி, ஆக. 10: பழநி வழித்தடத்தில் மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்- பழநி- கோவை மீட்டர் கேஜ் பாதையில் ரமேஷ்வரம்- கோவை, தூத்துக்குடி- கோவை, மதுரை- கோவை இன்டர்சிட்டி, திண்டுக்கல்- கோவை, திண்டுக்கல்- பழநி ரயில்களும், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, குருவாயூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் சில ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்கள் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாய் இருந்தது. அகலப்பாதை அமைக்கும் பணிக்காக கடந்த 2009ம் ஆண்டு ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதன்பின்னர் கடந்த 2017 ஜூலை முதல் பழநி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. தற்போது பழநி-கோவை மார்க்கத்தில் 1 ரயிலும், பாலக்காடு மார்க்கத்தில் 3 ரயில்களும் இயங்கி வருகின்றன. பழநி பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கல்வி மற்றும் வேலை தொடர்பாக கோவை சென்று வருகின்றனர். எனவே, பழநியில் இருந்து கோவைக்கு காலையிலும், மாலையிலும் ரயில் சேவை இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். மேலும், மீட்டர்கேஜில் திண்டுக்கல்-கோவை வழித்தடத்தில் இயங்கிய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: