ரூ.4.76 கோடியில் தூர்வாரப்பட்ட செட்டிபாளையம் காடு குட்டை குளத்திற்கு தண்ணீர் வந்தது

கோவை, ஆக.8: கோவை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது ரூ.4.76 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தூர்வாரப்பட்ட கோவை செட்டிபாளையம், காடுகுட்டை குளத்துக்கு ஒண்டிப்புதூர் சுத்திகரிப்பு நீரேற்று நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் வரத் துவங்கியுள்ளது. இதை, முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி நேற்று நேரில் பார்வையிட்டார். மலர்தூவி வரவேற்றார். பின்னர் அவர் கூறுகையில்,``விவசாயத்தினையும், விவசாயிகளின் நலனை காக்கவும் அதிமுக ஆட்சியின்போது அதிக அளவிலான நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அதில் ஒன்றுதான் இந்த திட்டம். பழமையும், பெருமையும் வாய்ந்த நொய்யல் ஆற்றினை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்ததும் நாங்கள்தான். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விவசாயிகளின் நலன் காக்க தொடர்ந்து உழைப்போம்’’ என்றார்.

Related Stories: