தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா 4ம் நாளில் எம்.சவேரியார்புரம், முத்தையாபுரம் பங்கு இறைமக்கள் சிறப்பு திருப்பலி

தூத்துக்குடி, ஜூலை30: உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இத்திருவிழா வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 4.30 மணி, பகல் 12 மணி, மாலை 3 மணி, இரவு 7.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று 4ம்நாள் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு 2ம் திருப்பலியும் நடந்தது. 6.30 மணிக்கு பாத்திமாநகர் பங்கு மக்களுக்கான திருப்பலி நடந்தது.

இதில் கலந்து கொள்ள அப்பங்கு மக்கள் ஊர்வலமாக ஆலயத்திற்கு திரண்டு வந்தனர். 7.30 மணிக்கு இனிகோநகர் பங்கு இறைமக்களுக்கான திருப்பலி நடந்தது.

தொடர்ந்து காலை 8.30 மணிக்கு ரத்தினபுரம் பங்கு மக்களுக்கான திருப்பலி நடந்தது. பின்னர் 9.30 மணிக்கு புனித அடைக்கல அன்னை சபை அருட்

சகோதரிகள், தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான திருப்பலி நடந்தது. பகல் 11 மணிக்கு இயேசு சபை துறவியர் மற்றும் புனித சவேரியார் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான திருப்பலி நடந்தது. மாலை 5.30மணிக்கு சவேரியார்புரம், முத்தையாபுரம் பங்கு இறைமக்கள் கலந்து கொண்ட திருப்பலி நடந்தது.

இதற்கு பங்குதந்தை பிரைட்மச்சாது தலைமை வகித்தார். திருப்பலிகளில் ஆலயபங்கு தந்தை குமார் ராஜா, பங்குதந்தையர்கள் அந்தோணிபிச்சை, பெலிக்ஸ், ஜெய்கர், சகாயம், ஜேம்ஸ் விக்டர், அமல் பிரதீப், அல்போன்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.  இரவு பங்குதந்தை வெனிஸ்குமார் ‘கள்ளமில்லா அன்பின் ஊற்று அன்னை மரியா’  என்ற தலைப்பில் மறையுரை வழங்கினார். தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 4ம் தேதியன்று இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்திற்குள் பனிமய அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.

ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் சிகர நிகழ்ச்சியான அன்னையின் பெருவிழாவில் இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவபவனி பிஷப் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது.விழா மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகளை பேராலய திருத்தல பணியாளர்கள் பங்குத்தந்தை குமார்ராஜா, உதவி பங்குதந்தை பால்ரோமன் மற்றும் அருட்சகோதரிகள், இயேசு சபையினர், லசால் அருட் சகோதரர்கள், பேராலய மேய்ப்பு பணிக்குழுவினர், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories: