தேர்தல் வாக்குறுதிகளில் 70% முதல்வர் நிறைவேற்றியுள்ளார்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு

காரைக்குடி, ஜூலை 30: தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதத்தை முதல்வர் நிறைவேற்றி உள்ளார் என, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.

காரைக்குடி 15வது வார்டு திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது. நகர்மன்ற தலைவர் முத்துத்துரை வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ சுபதுரைராஜ், நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சிகொடியை ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசுகையில், இன உணர்வு மிக்க இயக்கம் திமுக. தமிழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தவர் கலைஞர். பன்முக தன்மை கொண்டவர். இந்தியாவில் உள்ள முதல்வர்களிலேயே தலைசிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். மக்களுக்காக ஓய்வின்றி உழைத்து வருகிறார். தமிழகத்தை இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறார். திமுகவை எதிர்த்து போராட்டம் நடத்த அதிமுக விற்கு தகுதியில்லை.

வேண்டும் என்றால் டீசல், காஸ் விலையை உயர்த்தும் ஒன்றிய அரசை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்த வேண்டியதுதானே. தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றேகால் வருடத்தில் 70 சதவீதத்தை முதல்வர் நிறைவேற்றியுள்ளார் என்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்து பேசுகையில், திமுக இல்லையென்றால் நம் இனம், மொழி அழிக்கப்பட்டு இருக்கும். கருப்பு, சிவப்பு சட்டைக்காரர்கள் இருக்கும் வரை காவிச்சட்டைக்கு இங்கு இடம் இல்லை. தமிழ்நாட்டில் இவர்களால் கால் ஊன்ற முடியாது. முன்பு வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்றனர்.

ஆனால் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலத்தில் தெற்கு சிறக்கிறது, வடக்கு திரும்பிபார்க்கிறது என காலம் மாறி உள்ளது. எத்தனையோ கட்சிகள் பெயரை இழந்துள்ளன. ஆனால் பெயர், கொடியை இழக்காமல் உள்ள கட்சி திமுக. இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். எந்த காலத்திலும் வீழ்த்த, வெல்ல எவராலும் முடியாது. நமது முகவரிதான் இந்த கொடி என்றார்.

மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன், தொழிலதிபர் படிக்காசு, இளைஞரணி அமைப்பாளர் நாகனிசெந்தில்குமார், முன்னாள் இளைஞரணி துணைஅமைப்பாளர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் ஆனந்த், சின்னத்துரை, குன்றக்குடி சுப்பிரமணியன், முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரைசுரேஷ், மாவட்ட பிரதிநிதி ஜான்கென்னடி, நகர துணைச் செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்ட செயலாளர் சேதுராமன் நன்றி கூறினார்.

Related Stories: