கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல் விராலிமலை அருகே கோயில் திருவிழா நடத்த சமாதான கூட்டம்

விராலிமலை, ஜூலை 29: விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டியில் கருங்குழி கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு வருடம் தோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் நிகழாண்டு திருவிழா நடத்துவது என செய்யப்பட்டது. இதில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருபிரிவாக உள்ளனர். இதில் ஒரு தரப்பினர் தங்கள் தலைமையில் திருவிழா நடத்த வேண்டும் என்றும் மற்றொரு, தரப்பினர் அவர்கள் தலைமையில் திருவிழா நடத்த வேண்டும் என்று கூறி வந்தனர்.இதனால் திருவிழா யார் தலைமையில் நடத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து இரண்டு முறை வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் நேற்று திருவிழா நடத்துவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் விராலிமலை தாலுகா அலுவலகத்தில் இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பெரியதனம் ஆகியோர் தலைமையில் ஊர் வழக்கப்படி சுமூக பேச்சுவார்த்தை நடத்தி திருவிழா யார் தலைமையில் நடத்துவது என ஆக, 2-ம் தேதிக்குள் இறுதி முடிவு எடுத்துக் கொள்வதாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டு அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனையடுத்து இறுதி முடிவு எடுக்கும் வரை திருவிழா நடத்த கூடாது என்றும் மீறும் பட்சத்தில் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்படாத சிலர் அலுவலக வாயிலின் முன்பு நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.தொடர்ந்து ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இக்கூட்டத்தில் விராலிமலை தாசில்தார் சதீஷ், துணை தாசில்தார் சரவணன், ஆர்ஐ மணிமேகலை, விஏஓ ஜீவானந்தம் பங்கேற்றனர்.

Related Stories: